முனீஸ்வரன் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாக கருதப்படுகிறார். முனீசுவரன் வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாகும். முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும். கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர். முனி என்ற சொல் ரிக் வேதத்தில் 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு - வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது. கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்...