மகாவிஷ்ணு சிறுகதை
கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான்.இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.விடிய விடியத் தூக்கமில்லாமல் படுக்கையில் கிடந்த நெசவாளி, விடிந்து நெடுநேரமாகியும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.காலையில் வேலைக்குப் புறப்பட்ட தச்சன் நண்பனுடைய அறைக்கு வந்தான்.
வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடித் தயாராக இருக்கும் நெசவாளி அன்று அவ்வளவு நேரமாகியும் படுக்கையிலேயே கிடந்தது தச்சனுக்கு பெருவியப்பை அளித்தது.அருகில் நெருங்கி நண்பனைக் கவனித்தான். அவன் தோற்றம் அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருந்தது.கண்கள் குழிவிழுந்துக் கிடந்தன. உடல் வெளிறி இரத்தசோகை பிடித்தது போலக் காட்சியளித்தான். கை கால்கள் மெலிந்து – சோர்ந்து கிடந்தன.
முதல் நாள் இரவு அரண்மனை விழாவின் போது பார்த்த தன் நண்பனா இவன் என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது தச்சனுக்கு.என்ன நண்பா ? இரவு என்ன ஆயிற்று. திடீரென ஏதாவது கடுமையான பிணிக்கு இலக்கானாயா ? என்று கவலையோடு கேட்டான் தச்சன்.
ஆமாம் படுமோசமான காம நோய் என்று சொல்ல வாயெடுத்த நெசவாளி பேச்சை மாற்றி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இரவு சரியாக உறக்கமில்லை என்று மழுப்பினான்.அவன் சொன்ன பதிலில் தச்சனுக்கு நம்பிக்கை எழவில்லை. திரும்பத் திரும்ப விசாரித்தும் நெசவாளியிடமிருந்து மழுப்பல் பதில்தான் கிடைத்தது.இந்தப் பதிலைக் கேட்டுத் தச்சன் சலிப்பும் மனவருத்தமும் அடைந்தான்.
நண்பா நீ பேசுகிற விதம் ஒர் உண்மை நண்பன் தன் உற்ற நண்பனிடம் பேசுவது போல இல்லை. நண்பன் மன வருத்தப்படக்கூடும் என்று அஞ்சியோ, கேலி செய்வான் என்று வெட்கப்பட்டோ தன் மனத்தில் உள்ள உண்மையினைச் வெளிச் சொல்லாமல் மறைப்பவன் – மழுப்புபவனை உண்மை நண்பன் என்று கருதமுடியாது, நீ இரவு ஏதோ சகிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சல்பட்டு அவதியுற்றிருக்கிறாய் என்று தெளிவாகத் தெரிகின்றது. அப்படியிருந்தும் நீ என்னிடம் உண்மையை மறைக்கின்றாய் என்றால் இனி நான் உன் நண்பன் என்றோ – நீ என் நண்பன் என்றோ வீணாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. நான் வருகிறேன் என்ற கூறியவாறு தச்சன் மனவருத்தத்துடன் எழுந்தான்.
நெசவாளி படுக்கையிலிருந்து அவசர அவசரமாக எழுந்து தன் நண்பனின் கையைப் பிடித்து அமரச் செய்தான்.பிறகு நண்பா என்னைத் தவறாகக் கருதிக் கொள்ளாதே உண்மை தெரிந்தால் என்னை நீ கேலி செய்வாயோ என்று வெட்கப்பட்டுத்தான் உண்மையைச் சொல்லத் தயங்கினேன். இப்போது எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன் என்ற கூறி இளவரசிமீது தனக்குக் கவர்ச்சி ஏற்பட்ட செய்தியினையும் அதன் விளைவாக இரவெல்லாம் தன் மனம் பட்ட பாட்டையும் விளக்கமாக எடுத்துரைத்தான்.நண்பன் சொன்ன தகவலை தச்சன் அனுதாபத்துடன் செவிமடுத்தான்.
பிறகு, நண்பா, உன்னைப் போன்ற ஓர் இளைஞன் தன் பருவத்தையொத்த ஒரு இளம் பெண்மீது ஆசை கொள்வது முறைகேடோ – செய்யத் தகாத தவறோ அல்ல. ஆனால் நீயோ ஒரு நெசவுத் தொழிலாளி – அவளோ ஓர் அரசிளங்குமாரி, மடுவுக்கும் மலைக்குமுள்ள இந்தப் பெரிய வேறுபாட்டை எவ்வாறு சரி செய்யமுடியும் ? தவிரவும் விஷயம் வெளிப்பட்டால் மன்னருடைய கோபத்துக்கும் தண்டனைக்கும் இலக்காக நேரிடும். நண்பா, நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டான்.
நான் என்ன நினைக்க முடியும். இளவரசி மீது எனக்கு ஏற்பட்ட பற்றை எவ்விதமும்மாக மாற்றிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. நீதான் இதற்கு ஏதாவது ஒரு உபாயம் செய்து தன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நெசவாளி மொழிந்தான்.
தச்சன் சிறிது நேரம் யோசித்தான்.பிறகு நெசவாளியை நோக்கி, நண்பா, கவலையை விடு. எழுந்து குளித்துவிட்டு நிம்மதியாக உணவு கொள். நான் எப்பாடு பட்டாவது அந்த இளவரசியை நீ மணந்து இன்பமாக வாழ ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி கொடுத்தான்.
நண்பனின் உறுதிமொழி நெசவாளிக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது. ஆகவே கவலையை விடுத்து தன் அன்றாட பணிகளில் ஊக்கமுடன் ஈடு பட்டான்.நாலைந்து நாட்களுக்குப்பிறகு தச்சன் வினோதமான கருடவாகனம் ஒன்றை தயார் செய்து எடுத்துக் கொண்டு நெசவாளியிடம் வந்தான்.
தக்கவாறு வண்ணங்கள் பூசப்பட்டு உண்மையிலேயே உயிருடன் ஒரு கருடன் நிற்பதுபோல அது காட்சியளித்தது.மற்றொரு அற்புதத்தையும் தச்சன் அந்தக் கருட வாகனத்தில் அமைத்திருந்தான்.தரையிலிருந்து கருடன் ஆகாயத்தில் எழும்பிச் சென்று பறப்பதற்கும் விரும்பும் போது பறக்கும் கருடனை கீழே இறங்கச் செய்வதற்கும் உரிய விசைகள் அந்தக் கருட வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
தச்சன் எந்த விசையை எவ்வாறு இயக்கி ஆகாயத்தில் கருடனைப் பறக்கச் செய்யலாம் என்று என்பது குறித்தும் பறக்கும் கருடனை எவ்வாறு கீழே இறக்கலாம் என்பது குறித்தும் நெசவாளிக்கு விளக்கி அந்த விசைகளை இயக்குவதற்கான பயிற்சியினையும் அளித்தான்.
நண்பா, இளவரசியை எப்படியாவது அடையவழி சொல்லுமாறு கேட்டேன் நீ இந்த விளையாட்டுப் பொம்மையைக் கொண்டு வந்திருக்கிறாயே என்று நெசவாளி கேட்டான்.தச்சன் சிரித்துக் கொண்டு, நண்பா இந்த கருட வாகனத்தை ஒரு நோக்கத்துடன் நான் செய்திருக்கின்றேன். நம்முடைய அரசரும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் மகாவிஷ்ணுவின் தீவிரமான பக்தர்களாகும். நீ மகாவிஷ்ணு போல வேடம் தரித்துக் கொண்டு இரவு நேரத்தில் இந்த கருடவாகனத்தில் ஏறி அமர்ந்து, அரண்மனை உப்பரிக்கையில் சென்று இறங்கு.
இளவரசி இரவு நேரத்தில் உப்பரிக்கையில்தான் உறங்குகிறாள். தோழிகள் எல்லாம் அவளை விட்டு விலகி சற்று மறைவான இடத்தில் உறங்குகின்றனர்.நீ மகா விஷ்ணுவே மேல் உலகிலிருந்து இறங்கி வந்திருப்பதாக இளவரசி நம்புமாறு நடித்து அவள் அன்பையும் காதலையும் பெறு. பிறகு அவளைக் கந்தர்வ முறைப் படி திருமணம் செய்து கொள். அதற்கு பிறகு உன் சாமர்த்தியம் * என்று கூறினான்.
நெசவாளி மகிழ்ச்சிப் பெருக்குடன் தன் நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான அவனுக்குப் பலவாறாக நன்றி சொன்னான்.தச்சன் பின்னர் நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான்.நெசவாளி பரபரப்புடனும், பெருந்தவிப்புடனும் பகல் பொழுது போய் இரவு பொழுது எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருந்தான்.
ஒருவழியாக இரவு வந்தது.நெசவாளி எழுந்து நீராடினான். பட்டினால் ஆன அழகிய ஆடைகளை அணிந்து கொண்டான். நறுமணம் கமழும் வாசனா திரவியங்களை உடல் முழுவதிலும் பீசிக் கொண்டான். மணம் நிறைந்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான். தாம்பூலம் தரித்து உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டான். தக்க அணிகலன்களை அணிந்து தலையில் ஒரு கிரீடத்தையும் சூட்டிக் கொண்டான்.
பிறகு கருட வாகனத்தில் ஆரோகணித்து அதனைப் பறக்க வைப்பதற்கான விசை முடுக்கினான்.நெசவாளியைச் சுமந்து கொண்டு கருட வாகனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.கருடவாகனம் அரண்மணை உப்பரிகை மீது பறந்து கொண்டிருக்கும்போது நெசவாளி, அதனை கீழிறக்குவதற்காக விசை முடுக்கினான்.
கருட வாகனம் நெசவாளியைச் சுமந்தவாறு உப்பரிகையின் மீது இறங்கியது.அந்தச் சமளத்தில் இளவரசி மட்டும். உறங்காமல் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பாதுகாவலாக இருந்த தோழியர் சற்றுத் தள்ளித் தனியிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த நிலா குளிர்ந்த ஒளியை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. சிலுசிலுவென வீசிய இளந்தென்றல் இதயத்தைத் தடவிக் கொடுத்தது.இன்பகரமான காதல் நினைவுகள் உள்ளத்திலே அலை மோத இனிய கனவுகளைக் கண்டாவாறு இளவரசி அமர்ந்திருந்தாள்.கொஞ்ச காலமாக அவள் மனத்திலே திருமண ஆசை துளிர்விட்டுக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment