பழையமுதும்...மாவடுவும்

ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. 

பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. 

அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. 

அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.



 ஆம், இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அன்றோ திருமால், அவன் ஒரு ஏழைப் பாட்டிக்காக அவளின் பெயரனின் வடிவம் தாங்கி வந்த திருவிளையாடலைத் தான் பார்க்க இருக்கிறோம்.


ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான்.

 ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பெயரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. 

அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான்.


மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பெயரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பெயரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான்.

 உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பெயரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா?
காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆற்றுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். 

ஆம், பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பெயரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பெயரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள்.

 பசித்திருந்த பெயரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பெயரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். 

பாட்டியும் பெயரனும் ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவ விழாவில் இதை நடத்தி வருகிறார்.

 ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது இல்லையா?
இன்றும் ஸ்ரீரங்கத்தில்... பழையமுதும் மாவடும் பிரபலம்!!!

Source - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்


Comments

Popular posts from this blog

MAHA MUNISHWARAN MANTRA

அருவா மினுக்குதையா எங்க தேகம் சிலுக்குதையா....அருள்மிகு காட்டு முனீஸ்வரர் பாடல்

Collection of mantras for Ayya & Amma